76. அருள்மிகு ஓதனவனேஸ்வரர் கோயில்
இறைவன் ஓதனவனேஸ்வரர்
இறைவி ஒப்பிலா நாயகி
தீர்த்தம் காவிரி
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருச்சோற்றுத்துறை, தமிழ்நாடு
வழிகாட்டி தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் திருக்கண்டியூர் வந்து சிவன் கோயிலுக்கு முன்னர் திரும்பும் சாலையில் திருவேதிக்குடி தலம் கடந்து 5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.
தலச்சிறப்பு

Thiruchotruthurai Gopuramமுற்காலத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது அருளாளன் என்னும் அந்தணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து எடுக்க எடுக்கக் குறையாத அன்னம் பெற்று பிறர் பசிப்பிணி போக்கிய தலம். மேலும் அம்பிகையின் அருளால் சில வயல்களில் அன்னமே விளைந்ததாகக் கூறுவர். கோயிலுக்கு தென்மேற்கில் உள்ள அல்லிக் குளத்தின் அருகிலுள்ள வயலில் அவ்வாறு விளைந்ததாகக் கூறப்படுகிறது. ஊருக்கு தெற்கே 'சோறுடையான் வாய்க்கால்' என்ற வாய்க்கால் ஓடுகிறது. அதனால் இத்தலம் 'சோற்றுத்துறை' என்ற பெயர் பெற்றது. 'சோறு' என்றால் 'முக்தி' என்ற பொருளும் உண்டு. பசிப்பிணி போக்கியதால் இத்தலத்து மூலவர் 'ஓதனவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். 'ஓதனம்' என்றால் 'அன்னம்' என்ற பொருள்.

Thiruchotruthurai AmmanThiruchotruthurai Moolavarமூலவர் 'ஓதனவனேஸ்வரர்', 'தொலையாச் செல்வநாதர்' என்னும் திருநாமங்களுடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். ஆனால் தற்போது 'ஓதவனேஸ்வரர்' என்றும் அழைக்கின்றனர். அம்பாள் 'ஒப்பிலா நாயகி', 'அன்னபூரணி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

இக்கோயிலில் சுவாமி, அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கியே தரிசனம் தருகின்றனர். இவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் மயில்மீது சுமார் 5 அடி உயரமுடன் காட்சி அளிக்கின்றார். அதனால் இது 'சோமாஸ்கந்த தலம்' என்று போற்றப்படுகிறது.

Thiruchotruthurai Arulalarஅருளாளன் என்னும் அந்தணனும், அவனது மனைவியும் சிவபெருமானை நோக்கி மண்டியிட்ட நிலையில் தவம் செய்யும் திருவுருவங்கள் மூலவரின் கருவறைக்கு வெளியே இடப்புறம் உள்ளது.

திருவையாறு சப்தஸ்தானத் தலங்களுள் நான்காவது தலம். திருவையாறு, திருப்பழனம், திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகியவை மற்ற தலங்கள். சித்ரா பௌர்ணமி அன்று சப்தஸ்தானத் திருவிழா என்று வழங்கப்படும் ஏழூர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலத்தில் கௌதம மகரிஷி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் கோயில் கோபுர உள்வாயிலின் தென்திசையில் அவரது திருஉருவம் உள்ளது.

இந்திரனும், சூரியனும் வழிபட்ட தலம்.

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 'ஏழு திருப்பதி' என்று பாடியுள்ளதால் இத்தலமும் திருப்புகழ் தலமாகும். சப்தஸ்தானத் தலங்களுள் திருவையாறு, திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு மட்டும் தனித் திருப்புகழ் உள்ளது.

திருஞானசம்பந்தர் 1 பதிகமும், திருநாவுக்கரசர் 4 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com